
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டமானது தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் அக்குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். கடந்த ஜூன் 6ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள், துணைத்தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன்படி பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். அன்றைய தினமே தமிழ்நாடு முதலமைச்சரைக் குழு உறுப்பினர்கள் சந்தித்தனர். ஆனால் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற நிலையில், அக்குழுவின் இரண்டு கூட்டங்கள் சென்னை எழிலகத்தில் நடைபெற்றன.
மக்கள் வளர்ச்சி சார்ந்த பணிகளை இந்தக் குழு நிச்சயமாக மேற்கொள்ளும் என்ற உறுதியை அக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியின் வாயிலாக தெரிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது.