காவலர் தேர்வுக்கு செல்ஃபோன் எடுத்துச் சென்ற இருவர் கைது!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு படைவீரர் ஆகியோருக்கான தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் 28,624 பேர் தேர்வு எழுதினார்கள்.
இந்தத் தேர்வு எழுத வந்தவர்கள் செல்ஃபோன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 10-ல் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிய கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ் (22) என்பவர் தனது உள்ளாடைக்குள் செல்ஃபோனை மறைத்து எடுத்து வந்து அதன்மூலம் கேள்வித்தாளைப் படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்ப முயன்றபோது பிடிபட்டார். இதேபோல் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள சேப்ளாநத்தம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செல்ஃபோன் எடுத்து வந்து கேள்வித்தாளைப் படம் எடுத்து அனுப்ப முயன்ற திட்டக்குடி அருகேயுள்ள வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் வினோத்குமார் (24) என்பவரும் பிடிபட்டார்.
அதையடுத்து மோகன்ராஜ் மீது நெய்வேலி நகரக் காவல்நிலைய போலீசாரும், வினோத்குமார் மீது மந்தாரக்குப்பம் காவல் நிலைய போலீசாரும் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
காவல்துறைக்கான எழுத்துத்தேர்வு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.