Skip to main content

“அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாகக் கைவிடுகிறார் முதலமைச்சர்...” - எடப்பாடி பழனிசாமி

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

"The Chief Minister is abandoning the schemes brought by the ADMK one by one.." - Edappadi Palaniswami

 

சிதம்பரம் அருகே வல்லம் படுகை கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். அபோது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “கடலூர் மாவட்டத்திலேயே பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரே விதமான சேவையைச் செய்யும் இயக்கமாக உள்ளது.

 

எப்போதெல்லாம் பருவ மழை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தப் பகுதி கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து வடிகால் வசதிகளைச் செய்து மழைநீர், வெள்ளநீர் வடிகின்ற சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதில் ஒரு திட்டம்தான் மா.ஆதனூர் - குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.500 கோடியில் கதவணை கட்டிக் கொடுத்துள்ளோம்.  

 

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க் கடன்களை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். அதன்பிறகு கொரோனா தொற்று காலத்தில் விவசாயிகள் வருமானம் குறைந்து கஷ்டப்பட்டபோதும் விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 முறை பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு.

 

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு தொடங்கியது. இதனை அனைத்தையும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூடிக் கொண்டிருக்கின்றது. அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு 7.5% கொண்டு வந்தோம். அதில் இந்த ஆண்டு 565 பேருக்கு மருத்துவ சீட் கிடைத்துப் பயின்று வருகிறார்கள். மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கினோம் அதனை இந்த அரசு நிறுத்திவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாகக் கைவிட்டு வருகிறார்” எனப் பேசினார். 

 

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ, அதிமுக அமைப்புச் செயலாளர் முருகுமாறன் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்