ஈரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவிகள் 337 பேருக்கு தமிழக அரசின் சைக்கிள் வழங்கும் விழா நேற்று (21 ஜன.) நடந்தது. இந்நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து கலைமகள் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவில் 314 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை செங்கோட்டையன் வழங்கினார். தொடர்ந்து காசி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "இந்த அரசு, பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ரேங்க் சிஸ்டம் முறையை இந்த அரசுதான் ரத்து செய்தது. அதைப்போல் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வெளியிட்டது. புதிய பாடத்திட்டம் கொண்டுவந்தது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரித்திர சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் 411 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. 147 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவனுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான ஆசிரியர்கள் உள்ளனர். கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்பட்டால் அவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆசிரியர் தேர்வுக்கான புதிய அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பணி என்பது தமிழகத்தில் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளதோ அதற்கு தகுந்துபோல்தான் நிரப்ப முடியும். கூடுதலாக நிரப்ப வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்த பிறகுதான் கூடுதலாக நிரப்ப முடியும். அதற்கு மேலும் இருந்தால் தேர்வு வைத்துத்தான் நிரப்ப முடியும்.
பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் நிரப்பப்படும். ஈரோடு மாவட்டம் பன்னாரி மாரியம்மன் கோவிலில் ராஜ கோபுரம் கட்டுவதற்கு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. பெண்கள் படிக்கும் அரசு பள்ளியில் கழிப்பறைகளைத் தூய்மையாக பராமரிப்பு செய்ய மத்திய அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.