புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன் (வயது 69). இவருக்கும் இவரது உறவினர் ஆறுமுகத்திற்கும் சொத்துப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இது சம்மந்தமாக, ஆறுமுகம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாருக்காக விசாரனை செய்ய ராதாகிருஷ்ணனை போலீசார் காவல் நிலையம் அழைத்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை விசாரணை செய்தார். அப்போது ராதாகிருஷ்ணன் இந்தப் பிரச்சனை சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கூறியுள்ளார். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவில்லை.
அதற்கு ராதாகிருஷ்ணன் வழக்கு நிலுவையில் உள்ளது என்று வழக்கு சம்மந்தமான ஆவணங்களை பையில் இருந்து எடுக்கும் போது தலைமைக் காவலர் முருகன் வேகமாக எழுந்து 'பளார்' என முதியவரான ராதாகிருஷ்ணன் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் நாகூசும் வார்த்தைகளில் திட்டி, கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன் என உரக்கக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை, அருகில் நின்ற காவலர் சமாதானம் செய்துள்ளார். இந்தச் சம்பவங்கள் எல்லாம் ஒரு செல்ஃபோனில் வீடியோவாகப் பதிவாகி இருந்தது. பதிவான வீடியோ காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட தலைமைக் காவலர் முருகன் தொடர் விசாரணைப் பிறகு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.