மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காவலர் ஒருவரின் உடல் தேங்கிய மழைநீரில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் லூதர் கார்டன் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ருக்மாங்கரன் (48). இவர், ஐசிஎப் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இவருக்கு நேற்று முன் தினம் (04-12-23) வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய நாள் வீட்டில் இருந்த ருக்மாங்கரன், மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து அருகே உள்ளே கடைக்கு சென்றார்.
வெளியே சென்ற ருக்மாங்கரன், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் எல்லாம் தேடி வந்தனர். ஆனாலும், ருக்மாங்கரன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (05-12-23) காலை 8 மணியளவில் கீழ்ப்பாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகே மழைநீரில் ருக்மாங்கரன் உடல் மிதப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இந்த சம்பவத்தை பற்றி தலைமை செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருக்மாங்கரன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், வெளியே சென்றவர் மழைநீரில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது உடல் உபாதைகள் ஏதாவது உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.