சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆனி திருமஞ்சன திருவிழா இன்று நடைபெற்றது.
முன்னதாக, வரும் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது எனத் தடை விதித்து தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைத்தனர். இதற்கு பக்தர்கள் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தபோது சரியான காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வைக்கப்பட்ட பதாகையை இன்று மாலை அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் அகற்றப்பட்டது. அப்போது கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி கோவில் வளாகத்தில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவிலில் பரபரப்பான சூழல் காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கனக சபை மீது பக்தர்கள் ஏற கூடாது என்று வைக்கப்பட்ட்டிருந்த அறிவிப்பு பலகையை அகற்ற சென்றபோது கோவில் தீட்சிதர்கள் மய அறநிலையத்துறையின் அதிகார்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் கோவில் தீட்சிதர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.