சிதம்பரம் வீனஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் எஸ். குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ரூபியல் ராணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலை பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர்கள் பார்த்தசாரதி, கண்ணப்பன், துணை பேராசிரியர் கலைச்செல்வன் மற்றும் கணினி, அறிவியல், பொறியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வுக் குழுவினராகக் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள்.
இதில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் ஐசக் நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசன், விக்ரம் சாராபாய் ஆகியோர்களின் வேடமணிந்து மாணவர்கள் அஸ்வின், ஆசிப் அலி, மகேஸ்வரன், தீபக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை சிறப்பு விருந்தினர்களுக்கு காண்பிக்கும் விதமாக 100க்கும் மேற்பட்ட மேஜைகளில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதனைத் தேர்வுக் குழுவினர் மதிப்பீடு செய்து மாணவர்களின் படைப்புகளுக்கு ஏற்றவாறு மதிப்பீடுகளை வழங்கினர். கண்காட்சியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களின் தனித்திறமைகளைப் பாராட்டினர். அறிவியல் கண்காட்சி அனைவரையும் கவர்ந்தது.