Skip to main content

நக்கீரன் செய்தியின் எதிரொலி; இந்து அறநிலையத்துறை அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Chidambaram Thillai Govindaraja Notification of Hindu Welfare Department Officer

 

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளது. இந்த இரு கோவிலின் கருவறையும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு பெருமாளையும் சிவனையும் ஒரே நேரத்தில் வழிபடும் வகையில் அமைந்துள்ளதால், உலக நாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தக் கோவிலுக்கு சிவ பக்தர்கள் மற்றும் வைணவ சமய பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒரு நாளைக்குப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

 

இந்த நிலையில் இந்தக் கோவிலில் பிரமோற்சவம் நடத்துவதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் எனப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.  இந்த நிலையில், கடந்த வாரம் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதர்சனம், திருவேங்கடம் மற்றும் தெய்வீக பக்தர் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா உள்ளிட்டவர்கள் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மனு அளித்தனர். இந்தத் தகவலைக் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நக்கீரன் இதழில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து செய்தி பதிவு செய்யப்பட்டது. இதனையொட்டி இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. மேலும் உடனடியாக 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரமோற்சவம் நடைபெறாமல் உள்ளதை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரன் கோவில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் பரணிதரன், கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் மற்றும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக உறுப்பினர்கள், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், ‘400 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் பிரமோற்சவம் நடைபெறவில்லை என அனைத்து தரப்பினர் தரப்பிலிருந்தும் புகார் வருகிறது என்றும் இதனை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. எனவே விரைவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவம் நடத்தப்படும்’ என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் வைணவத்தை வழிபடும் பக்தர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்