Skip to main content

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Chidambaram Rajamuttiah Government Medical College students continue struggle

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் அதே கட்டணத் தொகையை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக அறவழியில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு, தனிச் சட்டம் நிறைவேற்றி அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 9.6 லட்சமும் இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 5.5 லட்சமும்  அரசு  நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் பல் மருத்துவ முதுநிலை மாணவர்களுக்கு ரூபாய் 8 லட்சமும், இளநிலைக்கு ரூ 3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.

 

2013-2020 ஆண்டு வரை சுமார் 2,000 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு இப்பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இத்தொகை தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகையை விட, இரண்டு மடங்கு அதிகமாகும். இந்நிலையில், முற்றிலும் அரசு நிதியில் மக்களுக்காக, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமானது, பிற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை விட, 30 மடங்கு கூடுதலானது. கூடுதல், கல்விக் கட்டணத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சல் மற்றும் நிதி நெருக்கடியில் தவிக்கின்றனர்.

 

இதற்கு முன்னரே, பல்வேறு கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கப் பெறாததால், கடந்த மூன்று நாட்களாக, தொடர்ப் போராட்டங்களை அனைத்து மருத்துவ மாணவர்கள், பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் பாதிப்பு இல்லாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி அறவழியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளில் மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் மருத்துவ மாணவர்களின் நலன் காக்க உடனடியாகத் தலையிட்டு, பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்