Skip to main content

சிதம்பரம் நகரத்தில் ரூ. 16 கோடியில் திட்டப்பணிகள்; நகர்மன்ற தலைவர் தகவல்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Chidambaram  projects worth Rs 16 crore informed by the chairman of the city council

 

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரபாகர், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, திமுகவை சேர்ந்த மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், அப்பு சந்திரசேகர், வெங்கடேசன், காங். கட்சி மக்கின் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார்கள்.

 

இதில் தமிழக முதல்வர் பெண்களுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை வழங்குவதை வரவேற்றும், அதேபோல் நகராட்சித் தலைவர், துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கியதை வரவேற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் அனைவருக்கும் பதில் அளித்துப் பேசுகையில் சிதம்பரம் நகரில் வக்கரமாரி நீர்த்தேக்கம் சீரமைப்பு, மானா சந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்தல், சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட பகுதியில் சாலைகளில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால் உள்ளிட்ட ரூ. 16 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

 

இதில்  முதல் கட்டமாக ரூ. 9 கோடியில் மேலவீதி, தெற்கு வீதிகளில் மழைநீர் வடிகாலுடன் சாலையோர நடைபாதை இரும்பு தடுப்பு வேலி அமைத்து அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்படும். மேலும் 2-ஆவது கட்டமாக கீழவீதி மற்றும் வடக்கு வீதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், சி.கே. ராஜன், புகழேந்தி, மணிகண்டன், சரவணன் அசோகன் உள்ளிட்ட அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக மறைந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஏ.வி. நாகராஜனுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்குத் தமிழக முதல்வர் அறிவித்த மதிப்பூதியத்தை நகர்மன்ற தலைவர் வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்