சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 8 நாட்களாக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் பல் மருத்துவம், பொது மருத்துவம், முதுநிலை மருத்துவம் உள்ளிட்ட வகுப்புகளில் உள்ள மருத்துவ மாணவர்கள் மொத்தம் 500- க்கும் மேற்பட்டவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தைப் போல, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 8-ஆம் நாளான இன்று, கொட்டும் மழையில் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு அனைவரும் உணவு இடைவெளியின் போது, சமூக இடைவெளியைப் பின்பற்றி நோயாளிகளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, மாணவர்கள் கூறுகையில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் உடனடியாக எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி மாணவர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்கிறார்கள்.