பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை(29.7.2024) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது பிரார்த்தனையை காணிக்கையாக செலுத்தினர்.
பிரசி்த்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் கடந்த ஜூலை 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. ஜூலை 29-ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவத்தை முன்னிட்டு காலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கானோர் அங்கபிரதட்சிணம், அலகு போடுதல், பால்காவடி, பாடை பிரார்த்தனை மேற்கொண்டு தங்களது வேண்டுதலை செலுத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் உடலில் செடல் குத்தி வீதிவலம் வந்தனர். காலை 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சோதனை கரகம், அலகு தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 2 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சக்தி கிரகம் புறப்பட்டு வீதிஉலா வந்து கோயிலுக்கு எதிரே உள்ள தீக்குழியில் மாலை 6 மணிக்கு இறங்கிய பின்னர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சுமார் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி உற்சவத்தில் பங்கேற்றனர்.
ஜூலை 30-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும், ஜூலை 31-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுடைகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சிதம்பரம் டிஎஸ்பி (பொறுப்பு) ரூபன்குமார் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன் மற்றும் போலீஸார செய்திருந்தனர்.