சிதம்பரம் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் வட்டம் கலியமலை ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது என்றும், வேலை வழங்காமலேயே கைரேகையை வைக்க கூறி பெரும் தொகையை கமிஷனாக கலியமலை ஊராட்சி நிர்வாகம் பெற்று வருகிறது. இதற்கு கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை போவதை கண்டித்தும், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வார்டு மக்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றிய துணைத் தலைவர் சிவனேசன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்ட இணை செயலாளர் வாஞ்சிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லையா, மாநிலத் துணைத் தலைவர் நெடுஞ்சேரலாதன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தர்மதுரை, ஒன்றிய துணைத் தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மேலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து ஊராட்சியிலும் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி ஒன்றிய அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.