கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் கோவில் விழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடைவீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தினேஷ் ( 21). இவர் நேற்று முன்தினம் இரவு அங்கு நடந்த மாரியம்மன் கோவில் விழாவில் காளியாட்டத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன்கள் அண்ணன்,தம்பிகளான தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அங்கு வந்துள்ளனர். இவர்களுக்கிடையே கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் கிள்ளை பகுதியில் தினேஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற தாமரைச் செல்வனும், தமிழ்ச்செல்வனும், தினேஷூக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சேர்ந்து தினேஷை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் மயங்கி விழுந்த தினேஷை நண்பர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தினேஷ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து கிள்ளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன் ஆகியோரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.