உலகம் முழுவதும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே பல்வேறு விதமான அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் கொரானா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பினர். இதனால் சிக்கன் சாப்பிடுவது குறித்து மக்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் பிராய்லர் சிக்கன் விலை கிடுகிடுவென சரிந்தது. கிலோ ரூபாய் 150 க்கு விற்று வந்த பிராய்லர் சிக்கன் விலை கடுமையாக சரிந்தது. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் கறிக்கடைகள் பெருத்த நட்டத்துக்கு ஆளாகின.
இதனால் ஆம்பூர் பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனையாளர்கள் ஒன்றிணைந்து மக்களிடையே சிக்கன் சாப்பிடுவதால் கொரானா வைரஸ் பரவாது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க முடிவு செய்தனர். தங்களது கடைகளில் இன்று ஒரு நாள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரியாணி மற்றும் அதனுடன் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து பேனர் கட்டினர்.
இந்த விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் வரிசையில் நின்றும், முண்டியடித்தும் பிரியாணி, சிக்கன் 65 வாங்கினர். இனி பயம் நீங்கி, இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என நம்புகின்றனர் விற்பனையாளர்கள்.
மாநிலம் முழுவதும் கோழி இறைச்சி கடுமையாக விலை குறைந்த நிலையில் பிரியாணி கடைகள் மற்றும் சிக்கன் வறுவல் விற்பனை கடைகளில் விலை குறையாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.