தமிழ்நாட்டிலுள்ள இந்திய அஞ்சல் துறையில் 946 பேர் பணி நியமன பட்டியலில் தமிழர்கள் ஒருவர் கூட இல்லாததை கண்டித்து விருத்தாச்சலம் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு தமிழ் தேசிய பேரியக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கடந்த 30.03.2022 தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்ட புதிய ஊழியர் சேர்ப்பு பட்டியலில் உள்ள 946 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்றும், தமிழர்களை திட்டமிட்டு புறக்கணிப்பு செய்து, வெளி மாநிலத்தவர்கள் ஆதிக்கம் மேலோங்கி வருவதை கண்டித்தும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் விருத்தாச்சலம் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசிய பேரியக்க மாநில துணைத் தலைவர் முருகன் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர் அல்லாதவரை நியமிக்கும் மத்திய அரசை கண்டித்தும், இதை தடுக்காத மாநில அரசை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்திலும், தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்து விட்டு, வடநாட்டவர்களுக்கு வேலை வழங்கும் பாகுபாட்டை கண்டித்தும் போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதியில், தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், மற்ற மாநிலங்களில் அம்மாநிலத்தவர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பது போல், தமிழகத்திலும் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரியக்கத் தலைமை செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் பி.வேல்முருகன், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, நடுவண்குழு உறுப்பினர்கள் சி.பிரகாசு, தி.ஞானப்பிரகாசம், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொறுப்பாளர் சு.சிலம்புச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், தி.சின்னமணி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, அமைப்புக்குழு உறுப்பினர் மு. வித்யா உள்ளிட்ட பேரியக்கத்தினர் மற்றும் மகளிர் ஆயம் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.