தற்கொலை செய்ததாகக் கூறப்படும் செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அவரது தாயார் சந்திரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தைச் சேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண், ஜூன் 24-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி தேவேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் நிலையத்தினர் உடலைக் கைப்பற்றினர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், சசிகாலாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார்.
தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையைக் கொலை செய்து விட்டு நாடகமாடியதாகக் குற்றம் சாட்டியிருந்தார். தங்கை சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அந்த வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், சசிகலாவின் தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார்.
இந்நிலையில், மகள் சசிகலாவின் மரணம் குறித்த செய்யூர் காவல் நிலைய வழக்கை, சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி, அவரது தாயார் கே.சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முறையாக நடக்கவில்லை. இருவரும், தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்திலோ வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க செய்யும் காவல்துறையின் முயற்சி எனக் குற்றம் சாட்டியுள்ளார். இருவரையும் குண்டர் சட்டத்தில், அடைப்பதற்கு போதிய முகாந்திரம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்யூர் சசிகலாவின் தாயார் சந்திரா தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.