திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் செப்டம்பர் 28ந்தேதி காலை காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் இளைஞர் ஒருவர் டீ குடித்துக்கொண்டுயிருந்தார். டீக்கான காசு தந்துவிட்டு அவர் கிளம்பும்போது ஒரு கும்பல் அந்த இளைஞரை நோக்கி வந்தது. அதனைப்பார்த்துவிட்டு அந்த இளைஞர் செய்யார் நகரை நோக்கி ஓடினார்.
அந்த கும்பல் விடாமல் துரத்தியது. அப்போது, தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு செய்யார் நோக்கி சென்றது. அந்த பேருந்துக்குள் ஏறினார் அந்த இளைஞர். துரத்திவந்த கும்பலை சேர்ந்த 5 பேர் பேருந்தை மடக்கி நிறுத்தினர். நான்கு பேர் பேருந்துக்குள் ஏறினர், அவர்களின் கைகளில் இருந்த அருவா, கத்தியை பார்த்தபின் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள் என அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.
பேருந்தில் ஏறிய அந்த கும்பல் அந்த இளைஞரை வெட்டத்துவங்கினர். பேருந்தை மடக்கிய கொலை கும்பல், வெட்டிய கும்பல் என 10 பேர் கொண்ட கும்பல் பேருந்து பின்னால் வந்து நின்ற காரில் ஏறி காஞ்சிபுரம் நோக்கி சென்றுவிட்டனர்.
இதுப்பற்றிய தகவல் செய்யார் நகர காவல்நிலையத்துக்கு சொல்லப்பட்டதும், ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகள் சம்பவயிடத்தில் குவிந்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் யார் என விசாரணையில், 2 மாதத்துக்கு முன்பு செய்யார் நகரில் உள்ள வேல்சோமசுந்தரநகருக்கு குடிவந்த முருகன் காலத்தியின் 28 வயது மகன் சதிஷ்குமார் என்பது தெரியவந்தது.
இதற்கு முன்பு இவரது குடும்பம் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தது. சதிஷ்குமார் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை வாங்கி விற்பனை செய்யும் நபராக இருந்துள்ளார். இவரது குடும்பம் எதனால் செய்யார்க்கு மாறி வந்தது என தெரியவில்லை. ஆனால் சதிஷ்சை பார்க்க தினமும் வாகன புரோக்கர்கள், வழக்கறிஞர்கள் பலரும் அடிக்கடி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சதிஷ்க்கு இன்னும் திருமணமாகவில்லை. எதனால் இந்த கொடூர கொலை என தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.