மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 28/07/2022 தொடங்கி நடைபெற்ற நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான நிறைவு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் வெற்றி பெற்றோருக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
மாலை ஆறு மணி முதல் நடக்கும் விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி விழா நேரு விளையாட்டு உள் அரங்கில் நடைபெற இருப்பதால் மாநகர போக்குவரத்துக் காவல் துறை போக்குவரத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நிறைவு விழாவை ஒட்டி மதியம் ஒரு மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றப்படுகிறது. சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாகச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல் ஈவிகே சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.