உலக 'செஸ் ஒலிம்பியாட் 44' விளையாட்டுப் போட்டி முதல்முறையாக, இந்தியாவில் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள், சுவர் விளம்பரங்கள், செஸ் விளையாட்டுப் போட்டிகள், கலை நிழ்ச்சிகள், இலக்கிய போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் 'உலக செஸ் ஒலிம்பியாட் 44' விழிப்புணர்வைக் கூட உலக சாதனையாக்க நினைத்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் ஆலோசித்தது. கலையின் மீது அதிக ஆர்வம் கொண்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு 1,088 மாணவ, மாணவிகளை கொண்டு 8 மணி நேரத்தில் 2003 செஸ் ஒலிம்பியாட் பற்றிய தகவல்களை வெளிகாட்டும் நடன நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரியில் நடத்த ஆலோசித்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார். மருத்துவக் கல்லூரி டீன் பூவதி உள்பட ஏராளமானோர் முன்னின்று நிழ்ச்சியை நடத்தினார்கள்.
குறிப்பிட்ட 8 மணி நேரம் வரை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் நாயர் கண்காணித்து மாலையில் அதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் வழங்கினார். உலக போட்டிக்கான விழிப்புணர்வையே உலக சாதனையாக்கிய மாவட்ட நிர்வாகத்தை அமைச்சர்கள் உள்பட மாவட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர்.