Skip to main content

டிச.8-ல் விவசாயிகள் நடத்தும் பந்த்துக்கு ஆதரவு-ம.ஜ.க தலைமை நிர்வாகக்குழு தீர்மானம்!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020
mjk

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.

 

இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், அவைத் தலைவர் மவ்லவி நாசர் உமரீ, இணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜெ.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது முகம்மது பாருக், மதுக்கூர். ராவுத்தர்ஷா, மண்டலம். ஜெய்னுலாபுதீன், சுல்தான் அமீர், தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், ராசுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதில் தேசிய அளவில் நாடு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து அலசப்பட்டது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சுதந்திரம் நெறிக்கப்படுவது குறித்தும், ஜனநாயக சக்திகள் தேசிய அளவில் ஒருங்கிணைவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க எதிர்வரும் ஜனவரி 23 அன்று திருநெல்வேலியில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

நிறைவாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை..

1. விவசாயிகள் நடத்தும் பந்துக்கு ஆதரவு...

 

தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தலைமை நிர்வாகக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது. மேலும் இதற்காக நாடு தழுவிய அளவில் வரும் டிசம்பர் 8 அன்று விவசாயிகள் நடத்தும் பந்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது..

 

2) செம்மொழி ஆய்வு மையம்...

 

மத்திய அரசின் செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தை மைசூரில் உள்ள பிபிவி பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய பாஜக அரசின் முடிவினை  தலைமை நிர்வாக குழு கண்டிக்கிறது. இம் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

mjk

3) கேந்திரிய வித்யாலயாவில் தமிழ்...

 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் தமிழை ஒரு பாடமாக வைத்திருக்கும் வகையில் மத்திய அரசு நிபந்தனைகள் எதையும் விதிக்காமல், தினமும் தமிழ் பாடம் நடத்தும் வகையில் அதை  அமல்படுத்த முடிவு எடுக்க வேண்டும் என்று தலைமை நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

 

4) புதிய கல்வி கொள்கையில் நெருக்கடி கூடாது...

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (VGC) தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நெருக்கடிகளை தருவதை நிறுத்த வேண்டும் என்றும், இதில் தமிழக அரசு உறுதியான கொள்கை நிலைபாடு எடுக்க வேண்டும் என்றும் தலைமை  நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

 

5) மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு....

 

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடரும் நிலையில், ஆங்காங்கே விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என தலைமை நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது.

6) விஸ்வகர்மா மக்களுக்கு இட ஒதுக்கீடு...

 

விஸ்வகர்மா சமுதாய மக்கள் நாடெங்கும் பரவி வாழ்ந்து வருகின்றனர் என்பதால், ஓ.பி.சி பிரிவில் இருந்து 3 .5 சதவீத தனி இட ஒதுக்கீடை அவர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என தலைமை நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

8) வெள்ளை அறிக்கை தேவை...

 

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு, கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த துறைகளில், எவ்வளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசை தலைமை நிர்வாகக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

மேற்கண்ட தீர்மானங்களுடன் மஜக தலைமை நிர்வாகக் குழு நிறைவு பெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்