சென்னை வில்லிவாக்கம் அருகில் நேற்று முன்தினம் இரவு, பள்ளி மாணவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் இருந்து அழுதபடி இறங்கி உள்ளான். அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த மாணவனிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவன், ‘நான் லிஃப்ட் கேட்டு ஒருவர் வண்டியில் வில்லிவாக்கத்தில் ஏறினேன். பின்னர் அங்கிருந்து அவர் வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டு கிளம்பியவர் பாடி மேம்பாலம் அருகே உள்ள இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தினார். பின்னர் என்னிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்’ என அழுது கொண்டே கூறி உள்ளான்.
மாணவன் இவ்வாறு கூறியதை அருகில் இருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த விடீயோவை அங்கு இருந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சிறுவனை பைக்கில் அழைத்து வந்தவரிடம் அங்கு இருந்தவர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு அந்த நபர் எதுவும் கூறாமல் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவர் ஓட்டி வந்த வண்டியை சோதனை செய்தபோது, அந்த வண்டியில் பாஜக கட்சியின் கொடி, துண்டு மற்றும் பாஜக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தது. அந்த அடையாள அட்டையில் அம்பத்தூர் பகுதி பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் என்று குறிப்பிட்டு அதில் பாலச்சந்திரன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே மிக வேகமாக பொதுமக்கள் மத்தியில் பரவி வந்தது. இதனையடுத்து, சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருவதை அடிப்படையாக வைத்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும் பள்ளி மாணவனின் தாய் நேற்று போலீசில் இது குறித்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்தரை (வயது 47) பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.