சென்னை திருவொற்றியூர் கிராம தெரு அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் பள்ளியில் வகுப்பறைகளில் திடீரென கெமிக்கல் வாசம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் 35 மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது கெமிக்கல் வாயு நெடி எந்த பகுதியில் இருந்து வெளியானது என்பது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பள்ளியில் அம்மோனியா வாயு கசிவா எனத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) ஆய்வு செய்து வருகின்றனர். அதாவது ஆக்சிஜன் சிலிண்டர் உடன் பள்ளி ஆய்வகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகத்திற்குள் சென்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாய்வு கசிவு ஏற்படவில்லை என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வடசென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் சந்தித்து போது குழந்தைகள் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று வீட்டுக்குச் சென்று விட்டனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளியில் என்ன நடந்தது என ஆய்வு செய்ய வந்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் எல்லாரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளியின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள மூன்று வகுப்புகளில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதை நாங்கள் ஆய்வு செய்வது பள்ளி ஆசிரியர்களிடம் பேசியபோது ஆசிரியர்களுக்கும் சிறிய அளவில் மதியம் வாயு நெடி தெரிந்ததாகக் கூறுகின்றனர். இருப்பினும் ஆசியர்கள் துரிதமாகச் செயல்பட்டு மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.