'சென்னை டாக்ஸ்' (Chennai Talks) என்ற யூடியூப் சேனலில் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து இந்த வீடியோ தொடர்பாக, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், "பொது இடங்களில் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், 'சென்னை டாக்ஸ்' யூடியூப் சேனலின் உரிமையாளர் தினேஷ் குமார் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் 'பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்', 'பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்' உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அடையாறு காவல்துறை துணை ஆணையர் விக்ரமன் அச்சேனலை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று யூடியூப் நிறுவனம், ‘சென்னை டாக்ஸ்’சேனலை முடக்கியது.