'புரெவி' புயல், கரையைக் கடந்துவிட்ட நிலையில், மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில், அதிகாலை 05.30 மணிக்கு மேல், கனமழை கொட்டியது.
தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையிலும் பலத்த மழை பெய்துவருகிறது. சென்னையில் கனமழை காரணமாக,, பல்வேறு முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. சென்னை சாந்தோம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், கார் உரிமையாளர் ஒருவர் அவரது காரை, மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற, சாலையோரம் இருக்கும் நடைமேடை தடுப்புக் கம்பியில், ஒரு வேட்டியைக் கொண்டு, அவரது காரின் முன் சக்கரத்தை சாலையோரத் தடுப்பு கம்பியில் கட்டியுள்ளார். அந்தப் பகுதியைக் கடந்து சென்றவர்கள் இதனை அதிசயத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்த்துச் சென்றனர்.