சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருபவர் சூர்யா. இவர் நேற்று இரவு நேரப் பணியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக பாலாஜி என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு மருத்துவர் சூர்யா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.
அப்போது பாலாஜிக்கு குளுக்கோஸ் செலுத்துவதற்காக அவரது கையில் ஊசி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த ஊசியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர் சூர்யாவிடம் பாலாஜி கூறியுள்ளார். அதற்கு மருத்துவர் இன்னும் உங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் ஊசியை அகற்றக் கூடாது என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாலாஜி மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பாலாஜி அங்கு இருந்த கத்தரிக்கோலை எடுத்து சூர்யாவின் கழுத்தில் பலமாக குத்தி உள்ளார். இதனால் சூர்யாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சக மருத்துவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளித்தனர். நோயாளி ஒருவரால் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டது தொடர்பான தகவல் சக மருத்துவர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை டீன் தேரணி ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்குத் திரும்பினர். பாலாஜி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பயிற்சி மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.