Skip to main content

‘நோ பார்க்கிங்’ போர்டு; சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
Chennai police order for No Parking Board related issue

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை உருவாக்கும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ, வணிக நிறுவனமோ, “நோ பார்க்கிங்” (NO PARKNG) பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்கக்  கூடாது. அங்கீகரிக்கப்படாத நோ பார்க்கிங்” பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் நோ பார்க்கிங், சைன் போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதைச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கண்டறிந்துள்ளது. அதோடு முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Chennai police order for No Parking Board related issue

எனவே சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இந்த விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அங்கீகரிக்கப்படாத இடங்களில் நோ பார்கிங் தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

அதே சமயம் பொதுமக்கள் தங்கள் வாகனங்களைச் சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் இந்த விதிகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்வார்கள். எனவே இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்