Skip to main content

சென்னை பெசன்ட்நகரில் ஏழைகள் பசியாற உணவளிக்கும் ‘பெட்டகம்’

Published on 05/09/2017 | Edited on 05/09/2017

சென்னை பெசன்ட்நகரில் ஏழைகள் பசியாற உணவளிக்கும் ‘பெட்டகம்’

சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஐசா பாத்திமா ஜாஸ்மின். 34 வயதான இவர் தேவையைவிட மிகுதியாக உணவு தயாரித்து வீணாவதை தடுக்க திட்டமிட்டார். அதன்விளைவு தான், சென்னை பெசன்ட்நகர் 4-வது மெயின்ரோட்டில் உள்ள ‘ஐயமிட்டு உண்’ என்ற உணவு பெட்டகம்.

இந்த உணவு பெட்டகத்தின் மூலம் தினந்தோறும் ஆதரவற்றோர், ஏழைகள் பலர் பசியாறி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது வீட்டில் மீதமான கெட்டுப்போகாத உணவுகளை பேக்கிங் செய்து இந்த உணவு பெட்டகத்தில் வைத்துச் செல்லலாம். இதுதவிர ஓட்டல்களில் இருந்தும் உணவுகளை வாங்கி வைக்கலாம்.

குளிர்சாதன வசதி கொண்ட இந்த உணவு பெட்டகத்தில் வைக்கப்படும் உணவை ஏழைகள், ஆதரவற்றோர் எடுத்துச்சென்று பசியாறலாம். இந்த உணவு பெட்டகத்தின் அருகே தனியாக ஒரு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 5 சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டியில் தங்களுக்கு தேவைப்படாத ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பாத்திரங்கள், இதர பயனுள்ள பொருட்களையும் வைத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து செயல்பட்டுவரும் இந்த உணவு பெட்டகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் தங்களது தேவைபோக மீதமான உணவுப்பொருட்களை வைத்து செல்கின்றனர். அவ்வாறு வைக்கப்படும் உணவுப்பொருட்களை தேவைப்படுபவர்கள் எடுத்துச்சென்று பசியாறுகின்றனர்.

இதுதவிர பெட்டியில் வைக்கப்படும் ஆடைகள், புத்தகங்கள், காலணிகள் போன்றவற்றையும் ஏழைகள் பலர் எடுத்துச்சென்று பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உணவு பெட்டகம் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை செயல்படுகிறது. இங்கு வைக்கப்படும் உணவு மற்றும் ஆடை போன்ற பொருட்கள் சரியானவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாத சம்பள அடிப்படையில் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர இங்கு ஒரு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. உணவுப்பொருட்களை கொண்டுவந்து வைப்பவர்கள் அந்த உணவின் தரம் பற்றி பதிவேட்டில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி தாங்கள் கொண்டுவந்துள்ள உணவு எப்போது தயாரிக்கப்பட்டது, எத்தனை நாட்களுக்குள் அவற்றை உண்ணலாம் என்பது போன்றவற்றை பதிவு செய்கின்றனர்.

இங்கு நியமிக்கப்பட்டுள்ள காவலாளியும் அந்த உணவை பரிசோதித்து அது கெட்டுப்போகவில்லை என்று உறுதி செய்த பின்னரே பெட்டகத்துக்குள் வைக்க அனுமதிக்கிறார். 

சார்ந்த செய்திகள்