ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பரவுதலைத் தடுக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது ஜூன் 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நாடு முழுவதும் முடங்கியுள்ளதால் தினசரி வருவாயை நம்பியிருந்த பல்வேறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஷேர் ஆட்டோக்கள், டூரிஸ்ட் வேன்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
எனவே, மூன்று மாதங்களாக வருமானம் இன்றி பசியில் தவிக்கும் ஓட்டுநர் குடும்பங்களுக்கு தலா 15,000 ரூபாய் வழங்கவும், முடக்கி வைத்திருக்கும் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கவும் தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் நேற்றைய தினம் (03.06.2020) சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.