திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க திமுக நிர்வாகிகள் மக்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கியும் பல விதமான நிகழ்ச்சிகள் நடத்தியும் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை 4ம் தேதி தனது சொந்த மாவட்டமான கரூரில் அரசுத்துறை நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பிரமாண்டமாக அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் உள்ள கோவை மாவட்டத்திற்கு ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் உதயநிதியை அழைத்துச் சென்று அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். ஐந்தாம் தேதி காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் கோவையில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திமுகவின் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு சார்பாக இந்த இலவச திருமண நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 70 ஜோடிகளுக்கு மலர் மாலையை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த 70 ஜோடிகளுக்கும் திமுக சார்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.