வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (14.10.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாளை மறுநாள் (16.10.2024) வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர் புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழையும், அதனையொட்டியுள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 17ஆம் தேதி (17.10.2024) வட மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடல்பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் மேற்கு அரபிக் கடல்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு இன்று (14.10.2024) முதல் 18ஆம் தேதி (18.10.2024) வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.