
சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் செல்வதற்கு வசதியாக 'மெட்ரோ ரயில்' திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (14/02/2025) சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன், கோபால் ஐஏஎஸ் இடம் இதற்கான திட்ட அறிக்கையை வழங்கி உள்ளனர். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைய உள்ளது. மொத்தம் 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதற்கிடையில் அமைக்கப்பட இருக்கிறது. இதன் மொத்த மதிப்பீடு 9,335 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிளாம்பாக்கத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ போக்குவரத்து வழங்கும் வகையில் திட்டம் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேம்பால சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து பின்னர் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கு வருடத்திற்குள் இத்திட்டம் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணித்து நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
2028 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் முடிவடைந்தால் நகரத்திற்குள் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ வழித்தடங்கள் அமையும். இதனால் பொதுப்போக்குவரத்து மேம்படும் என மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வசதியாக எப்பொழுதும் மெட்ரோ நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது அதற்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சென்னை வாசிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.