சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வழிகாட்டுக் குழு, தற்போது உறுப்பினர் புதுப்பிப்பு முகாம் ஒன்றை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறப்பு வழிகாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் D.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள குறிப்பில், " கடந்த ஒன்றரை மாதங்களாக நாங்கள் செய்த ஆய்வில், பல உறுப்பினர்கள் பல்லாண்டுகளாக தங்களை புதுப்பித்துக் கொள்ளாத நிலையைக் கண்டோம். 30 ஆண்டுகளாக இங்கு உறுப்பினர்களின் விவரங்கள் அப்டேட் செய்யப்படாத நிலை உள்ளது.
பலர் இறந்துள்ளனர். பலர் வேறு மாவட்டங்களுக்கோ, மாநிலங்களுக்கோ புலம் பெயர்ந்துள்ளனர். பலர் இந்தத் துறையில் இருந்து வேறு துறைக்கு மாறி உள்ளனர். பலர் பத்திரிகை துறையில் இருந்தே ஓய்வு பெற்றுள்ளனர். ஆக, தற்போது நாம் அப்டேட் செய்வதன் மூலம்தான்.. பத்திரிகையாளர் மன்றத்தின் உண்மையான உறுப்பினர்கள் எண்ணிக்கை தெரியவரும். உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை புதுப்பிக்காமல் விட்டது, அவர்களுடைய தவறு என்று மட்டும் கருதிவிட முடியாது. ஏனெனெனில், மன்றத்தில் இருந்து, உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கொரு முறை நினைவூட்டல் செய்திருக்க வேண்டும். இடையிடையே முகாம் நடத்தி புதுப்பித்தலை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை. சில வழக்குகள் காரணமாக, உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பிப்பு உள்ளிட்ட பல வேலைகள் தடைபட்டதாகச் சொல்லப்பட்டது.
தற்போது, உறுப்பினர் புதுப்பித்தலில் பல்லாண்டுகள் விடுபட்டவர்கள் மொத்தமாக அத்தனை ஆண்டுகளுக்குமான பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நம் மன்றக் கட்டணம் குறைவாக உள்ளது என்ற வகையில், மிகப் பெரும்பாலானோர் கட்டிவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், நலிந்த நிலையில் உள்ள சிலருக்கு, இது பெரும் சுமையாக இருப்பது தெரியவந்தது. ஆகவே, அந்த மதிப்புமிக்க நீண்ட கால உறுப்பினர்களை.. நாம் பொருளாதாரக் காரணத்தால் இழந்துவிடுதல் என்பது சரியாகாது. ஆகவே, இதுபோன்ற சூழல் உள்ள சிலருக்கு, பாதி கட்டணம் நிர்ணயிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. கடைசியாக நடந்த 1999 ஆம் ஆண்டு தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில், தற்போதைய நிர்வாகத்தில்.. இரண்டு உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனடிப்படையில், இரண்டு உறுப்பினர்களில் ஒருவரும், மன்றத்தின் தற்போதைய பொறுப்புத் தலைவருமான கீதப்பிரியன் என்ற வர்த்தமானன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஏற்பிசைவும் கிடைக்க பெற்றது. மற்றொரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான நரேஷ்குமார் அவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்தச் சூழலில், பாதி கட்டணம் தொடர்பாக கா.அசத்துல்லா இந்தக் குழுவிடம் ஆட்சேபனைக் கடிதம் தந்துள்ளார். அவரது ஆட்சேபனையை இங்கு முறைப்படி உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவருக்கு இந்த அறிவிப்பே பதிலாகிறது. தற்போது இந்தக் குழுவின் முன்முயற்சியில் வழக்கு தொடுத்தவர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். தடைகள் நீங்கியுள்ளன. மீண்டும் பழைய உற்சாகத்திற்கு மன்றத்தை கொண்டு வர உறுப்பினர் அப்டேஷன் அவசியம். இந்த ஆண்டு புதுப்பித்துள்ள சீனியர்களுமே கூட, தற்போது தங்களை புதுப்பித்து புதிய எண் கொண்ட அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளுமாறு" சென்னை பத்திரிகையாளர் மன்ற சிறப்பு வழிகாட்டுக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.