சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த பெண்ணை, மோப்ப நாய் ஒன்று சுற்றி வளைத்து காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உகாண்டா நாட்டைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகள் அந்தப் பெண்ணை சோதனை செய்ய முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தது.
இதனால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரது உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் ஓரியோ என்ற பெண் நாய் உதவியுடன் உடமைகளைச் சோதனை செய்தபோது, பெண் பயணி கொண்டு வந்த உடைமையில் போதைப்பொருள் உள்ளது என நாய் குரைத்துக் காட்டியது. இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அவரது பையைத் திறந்து பார்த்தபோது அதில் மெத்தோ குயிலோன் என்ற போதைப்பொருள் ஒரு கிலோ 542 கிராமும், ஹெராயின் போதைப்பொருள் 644 கிராமும் இருந்தன. இதன் மொத்த மதிப்பு 5 கோடியே 35 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தி வந்ததாகக் கண்டறிந்த ஓரியோ என்ற பெண் மோப்ப நாயை அங்கு இருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டினர். இச்சம்பவத்தால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போதைப்பொருளை நாய் கண்டுபிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.