
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (07.03.2025) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. அதாவது சரியாக மாலை 06.24 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 06.28 மணிக்கு மக்ஃரிப் பாங்கு நடைபெற்றது. அதன்பின்னர் மக்ஃரிப் தொழுகை மாலை 06.35 மணிக்கு நடைபெற்றது. இந்த தொழுகை முடிந்ததும் அக்கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற்றது. இதற்காக சுமார் 2 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையே அக்கட்சியின் தலைவர் விஜய், இஸ்லாமியர்களோடு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு விஜய் வந்தார்.முன்னதாக ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் கூட்ட நெரிசல் நெரிசல் ஏற்பட்டது. மேலும் விஜய்யைக் காண ஏராளமானோர் அங்குத் திரண்டதால் அரங்கின் கதவு உடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதன் பின்னர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் நோன்பு திறந்தார். அதன் பின்னர் தொழுகையில் ஈடுபட்டார்.
நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு தொண்டர் பேசுகையில், 'இன்விடேஷன் வைத்தவர்கள் வந்த நிலையில் இன்விடேஷன் வைக்கப்படாதவர்களும் வந்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இன்விடேஷன் உள்ளவர்களை மட்டும் உள்ளே விட்டிருந்தால் இந்த மாதிரி ஒரு குளறுபடி இருந்திருக்காது. எல்லாரும் முண்டியடித்து கொண்டு உள்ளே வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விட்டது. மற்றபடி விழா சிறப்பாக இருந்தது. உள்ளே தொழுகை நிகழ்வு நடந்ததால் எல்லாரும்செருப்பை வெளியே விட்டிருந்தோம். இப்ப செருப்பை தேடுவதற்கு மட்டும் அரை மணி நேரம் ஆகிறது. எல்லோரும் அவரவருடைய செருப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பரிமாறுவதற்காக கொடுக்கப்பட்ட பிரியாணி கீழே சிதறிக் கிடக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது. பெண் ஒருவர் பேசுகையில் ''கூட்டிட்டு வரும்போது அன்பாக கூட்டிட்டு வருகிறார்கள். போகும்போது விட்டுவிட்டுப் போய் விடுகிறார்கள். எப்படியோ போங்க என விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். விஜய் கையாலே பரிசு கொடுப்பார் என்றார்கள். விஜய் கையால் கொடுக்கவில்லை. இவர்களாவது சரியாக கொடுத்திருக்க வேண்டும் கொடுக்கவே இல்லை'' என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.