
தூத்துக்குடியில் ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது, வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து, எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது வேதனை அளிப்பதாக, சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
சென்னை அயனாவரத்தில், இரு ரவுடிக் கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தன்னைக் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு ரவுடி குழுக்கள் குறித்த விவரங்களையும், அவர்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக டி.ஜி. பி க்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப், கடந்த 2018-ஆம் ஆண்டு, இந்த வழக்கு தொடர்பாக டி.ஜி.பி- யின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், மகாராஷ்டிரா, கர்நாடகா போல, தமிழகத்தில் சட்ட விரோதச் செயல்களைச் செய்யும் கும்பல்களோ, தீவிரவாதிகளோ இல்லை, எனவே அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இது கடந்த 2018 -ஆம் ண்டு சூழலைக் கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை என்பதால், மீண்டும் தற்போதைய டி.ஜி.பி.யிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
அதேபோல மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், குற்றவியல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்து, எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் தேசிய குற்றப் புலனாய்வு முகமை தமிழகத்தில் அதிக அளவிலான வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும், சமீபத்தில்கூட கேரள எல்லையில் நக்ஸல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், டி.ஜி.பி அறிக்கையில் திருப்தி இல்லை எனவும், இதுதொடர்பாக மீண்டும் உரிய ஆய்வு செய்து பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் சில ரவுடிகள், காவல்துறையோடும், அரசியல் கட்சிகளுடனும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கூட்டணி வைத்துள்ளனர். ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருகிறது. போலீசார் தாக்கப்படும் சூழல் அதிகரித்து வருகிறது. போலீசார் தாக்கப்படுவது தொடங்கிவிட்டாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது.
தூத்துக்குடி எல்லையான வல்லநாட்டில் ரவுடியைப் பிடிக்கச் சென்றபோது வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறோம். சமுதாயத்திற்காக உயிர்நீத்த அவரின் இழப்புக்கு தமிழக அரசு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை தவிர எதிர்க்கட்சிகள் எனச் சொல்லப்படும் யாரும், இது குறித்து வாய்திறக்கவில்லை.
சுஜித் வில்சன், ஆழ்குழாய்க் கிணற்றில் சிக்கி உயிரிழந்தபோதும், சாத்தான்குளம் சம்பவத்திற்கும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கதே. அங்கு மட்டும் வரிசையாகச் சென்று ஆறுதல் தெரிவித்து, லட்சங்களில் நிதியுதவி அளித்த எதிர்க்கட்சிகள், காவலர் சுப்பிரமணியன் மறைவு குறித்து வாய் திறக்கவே இல்லை. காவலர் உயிர் மட்டும் அவர்களுக்கு உயிராகத் தெரியவில்லையா?
6 மாத கைக்குழந்தையுடன் சிறு வயதில் மனைவியைப் பிரிந்துள்ள காவலரின் இறுதிச் சடங்கில், தமிழக டி.ஜி.பி, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே கலந்து கொண்டனர். எதிர்க்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

அந்தக் காவலரின் மரணத்திற்கு, தமிழக முதலமைச்சர் மட்டும் 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளார். மேலும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தைத் தாண்டி, மற்ற அரசியல் கட்சிகளும் இது போன்ற சம்பவங்களில் குடும்பத்திற்கு முன்னின்று உதவுவதுதான், நம்பிக்கையோடும், துணிவோடும் காவலர்கள் பணியாற்ற உத்வேகமாக அமையும்.
மனித உரிமை ஆணையங்கள், ரவுடிகள் இறக்க நேரிடும்போது காட்டும் அக்கறையை, காவல்துறை மீது காட்டுவதில்லை. ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக இரண்டு வாரங்களில் தமிழக டி.ஜி.பி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.