சென்னை அருகே எண்ணூர் பாரதி நகரில், சுமார் 300 குழந்தைகள் படிக்கும் ஆரம்ப தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்தப் பள்ளி செயல்பட்டு வந்தது. அறக்கட்டளை மூலம் இயங்கிவரும் இந்தப் பள்ளியில் சட்டமன்றத் தேர்தல்களின் வாக்குப்பதிவெல்லாம் நடந்திருக்கிறது. கரோனா காலம் என்பதால் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இந்தப் பள்ளியின் கட்டிடத்தை இடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. இதனால், அந்த இடத்தை விற்க முயற்சி நடக்கிறது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருக்கு புகார் கொடுத்தார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பள்ளிக் கட்டடங்களை புல்டோசர் வைத்து இடித்துவிட்டார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தமிழக கல்வித்துறை செயலாளருக்கும் பெற்றோர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.
இதனால் பள்ளி மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அரசிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆயினும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பெற்றோர்கள் தரப்பில் சந்திரகுமார் உள்பட ஏழு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி சார்பாக, வழக்கறிஞர்கள் பிரசன்னா மற்றும் வெண்ணிலா ஆகியோர் ஆஜராகி, ‘மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பள்ளிக் கட்டிடத்தை விற்பதற்கும், இடிப்பதற்கும் இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்‘ என்று வாதிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதி, பள்ளிக் கட்டிடத்தை தொடர்ந்து இடிக்கவும், இந்த இடத்தை மற்றவர்களுக்கு விற்கவும் இடைக்காலத் தடை விதிக்கிறேன். இந்த வழக்கில், தமிழக அரசின் கல்வித்துறை செயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.