தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது. அதேபோல தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரை சேமிக்க பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடந்த ஏரி, குளம், குட்டை, காட்டாற்று தடுப்பணை, வரத்துவாய்க்கால்களை அந்தந்த பகுதி இளைஞர்கள் சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
கொத்தமங்கலத்தில் இளைஞர் மன்றத்தின் சார்பில் கடந்த ஒரு மாதமாக அம்புலி ஆற்றில் தண்ணீரை தேக்கவும், காமராஜர் அணைக்கட்டில் இருந்து பாசனக்குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைத்ததுடன் கோடிய குளம், அய்யனார் கோயில் குளம் மற்றும் வரத்து வாய்க்கால்கள் முழுமையாக சீரமைக்கப்பட்ட நிலையில் அடுத்து பெரிய குளம் என்றும் பிடாரி அம்மன் கோயில் குளம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக கிராம பொதுமக்கள் தன்னார்வலர்கள், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் இளைஞர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர்களால் சீரமைக்கப்படும் குளம் மற்றும் நீர்நிலைகளை பார்வையிட்ட ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தின் இளைஞர்களை பாராட்டியதுடன் அய்யனார் கோயில் குளத்திற்கு கரைகள் கட்டி பலப்படுத்த எம்.எல்.ஏ நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும் பிடாரியம்மன் கோயில் குளமான பெரிய குளம் சீரமைப்பிற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாக இளைஞர்களிடம் உறுதி அளித்தார். மேலும் மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது.. தமிழ்நாட்டில் இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பு இல்லாமல் கவலைக்கிடமாக உள்ளது. தண்ணீர் தேங்குவதில்லை. அதனால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. அரசாங்கங்கள் அது பற்றிய கவலை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் கொத்தமங்கலம் இளைஞர்கள் நிலத்தடி நீரை சேமிக்க சொந்த செலவில் மராமத்துப் பணிகளை செய்து வருகிறார்கள். இந்த இளைஞர்களைப் பார்த்தாவது அரசாங்கங்கள் திருந்த வேண்டும். அவர்களுக்கு உதவியாக அரசாங்கம் களமிறங்கி கொத்தமங்கலம் மட்டுமின்றி மற்ற அனைத்து கிராமங்களிலும் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்கும் முயற்சிகளை செய்ய வேண்டும் என்றார்.