செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வந்தவர் ஆராவமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி (29.02.2024) இவரது காரை வழிமறித்து இவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆராவமுதனின் கை மற்றும் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதே சமயம் படுகாயம் அடைந்த ஆராவமுதன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் ஆராவமுதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
நாட்டு வெடிகுண்டு வீசி தி.மு.க. நிர்வாகி ஒருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இத்தகைய சூழலில் இந்த கொலை வழக்கு தொடர்பாகத் திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (08.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும். வேறு ஒரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததை ஏற்றுக்கொண்டதை ரத்து செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன் கிருஷ்ணன் ஆஜராகி வாதிடுகையில், “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் ஆஜராக வேண்டும் என்பது குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இருக்காது. எனவே ஒரு வழக்கில் குற்றவாளிகள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எந்த ஒரு நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் சரணடையலாம்” என வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதில் வேறு நீதிமன்றத்தில் யாராவது சரணடைந்தால் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். இந்த உத்தரவு பொருளாதார குற்றங்கள், அமலாக்கத்துறை பிரிவு குற்றங்களுக்குப் பொருந்தாது. இந்த உத்தரவின் நகலை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்றுத் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்” என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.