அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் எனப் பலரும் ஆளுநரின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது. மேலும் ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டார்கள். இதையடுத்து இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தார்கள். அதே போன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டன.