தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் இன்று (11.11.2024) வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் ௮ சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டி 7 சுற்றுகளைக் கொண்டு ரவுண்டு ராபின் (Round Robin) முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைரி தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவைச் சேர்ந்த லெவோன் ஆரோனின் உட்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.
அந்தவகையில் சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சேலஞ்சர்ஸ் பிரிவில் வி. பிரணவ் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலஞ்சர்ஸ் பிரிவு மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரத்தின் பட்டத்தை வென்றதற்கு வாழ்த்துகள். அவரது புத்திசாலித்தனமான யுக்தி குறிப்பாக இறுதிச் சுற்றில் தீர்க்கமான ஆட்டம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று தந்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் பிரணவ்க்கு வாழ்த்துகள். சேலஞ்சர்ஸ் பிரிவில் அவரது சிறப்பான செயல்திறன் எதிர்காலத்திற்கான மகத்தான நம்பிக்கையை காட்டுகிறது. பாராட்டுக்கள். உலக அரங்கில் சதுரங்க போட்டியில் சென்னையின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும் வகையில் செயல்பட்ட தமிழக விளையாட்டுத்துறைக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.