சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே 33 சிசிடிவி கேமராக்கள் அமைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 2,600 சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு சிலைக்கும் தனிப்பட்ட முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீலாங்கரை, பட்டினப்பாக்கம், எண்ணூர், காசிமேடு உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ளன. ஊர்வலம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் காவல்துறையினர் செய்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே 33 சிசிடிவி கேமராக்கள் அமைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் பூந்தமல்லி, கே.கே.நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடம்பாக்கம் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதால், எல்.இ.டி திரைகள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் சிலைகள் அனைத்தும் இன்று கரைக்கப்பட உள்ளதால் கடற்கரைக்கு வரும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படும். இதனால் ஈ.வே.ரா சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சாலைகளில் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மிகுதியாக இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தவாறு வாகன ஓட்டிகள் பயணத்தை திட்டமிடுமாறு போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.