முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவின் மாநில இணைச்செயலாளர் செல்வகுமார் என்பவர் கடந்த 3- ஆம் தேதி சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி. ஊடகங்களிடம் பேசிருக்கிறார். அதேபோல் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிருக்கிறார். தனிமனித ஒழுக்கமின்றி உண்மைக்கு மாறான செய்திகளை பொதுமக்களிடையே அவதூறு பரப்பும் வகையில் அவர் பேசிருக்கிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனுவுடன் வீடியோ ஆதாரத்தையும் சமர்பித்திருந்தார்.
இதையடுத்து இந்த புகார் மனு விசாரணைக்காக டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து புகார் மனு மீது விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி. மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.