சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபார்முலா போர் போட்டிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எப்பொழுது போட்டிகள் தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. கார் பந்தயத்தை காண வந்த ரசிகர்களுக்கு, இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதற்கு முன்பு சில நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்தது. அதில், கார் பந்தய வழியில் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதற்கான பெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஆட்டோமொபைல் (எஃப்.ஐ.ஏ) என்று சொல்லக்கூடிய சர்வதேச அமைப்பினர் செய்யக்கூடிய சோதனை சான்றிதழை இன்று மதியம் 12 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று சென்னையில் கடும் மழை பெய்ததால், எஃப்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று மதியம் 12 மணிக்கு சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்த காலத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு சார்பிலும் ரேசிங் நிறுவனம் சார்பிலும் இன்று அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பிலும், ரேசிங் நிறுவனம் சார்பிலும் வாதிட்ட வழக்கறிஞர்கள், ‘ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதற்கு முன் சான்று பெறப்படும். மாலை 6 மணிக்குள் எஃப்.ஐ.ஏ சான்று கிடைத்துவிடும். சான்று மறுக்கப்பட்டால் கார் பந்தயம் தள்ளிவைக்கப்படும். எஃப்.ஐ.ஏ சான்றிதழ் இல்லாமல் பந்தயம் நடத்தப்படாது. நடைமுறைகளை முடிக்க ஏதுவாக இரவு 7 மணி வரை அவகாசம் நீட்டிக்க வேண்டும்’ என வாதிட்டனர். இதனையடுத்து, ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘இரவு 8 மணிக்குள் எஃப்.ஐ.ஏ சான்றிதழ் பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.