சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 12 வயதுச் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தக் குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களைக் குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த நிலையில், மகளிர் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். இதே போன்று, குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் 120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற 16 பேர் விவரங்கள்:
ரவிகுமார் (56), சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால் பிராஸ் (58), அபிஷேக் (28), சுகுமாரன் (60), முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பழனி (40), தீனதயாளன் (50), பாபு (36), ராஜா (32), சூர்யா (23), குணசேகரன் (55), ஜெயராமன் (26), உமாபதி (42) ஆகியோர் ஆவர். இவர்களில், 12-ஆவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் சிறையிலேயே இறந்து விட்டார்.
கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் 354 – பி, 366 (பாலியல் வன்கொடுமை), 376 – ஏ பி (காயமேற்படுத்துதல்), 376 பி டி (கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12- வது பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதுதவிர, 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, (01/02/2020) அன்று இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், தோட்டக்காரரான குணசேகர் என்பவரை மட்டும் விடுதலை செய்தும் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகளின் தண்டனை விவரம் இன்று (03/02/2020) அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (03/02/2020) சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார். அதில் ரவிக்குமார், சுரேஷ், பழனி, அபிஷேக் ஆகிய நான்கு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை என்றும், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை பெற முடியாது என்று தெரிவித்தார். மேலும் மூன்றாவது குற்றவாளி ராஜசேகருக்கு ஆயுள் தண்டனையும், நான்காவது குற்றவாளி எரால் பிராஸ்க்கு (58) 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), தீனதயாளன் (50), ராஜா (32), ஜெயராமன் (26), உமாபதி (42), சூர்யா (23), சுகுமாரன் (60) உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.