Skip to main content

வாயில் கருப்புத்துணியைக் கட்டி சென்னை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய படைப்பாளிகள்...

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

சென்னை நந்தனத்தில் கடந்த 9ஆம் தேதி முதல் சென்னை புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் மக்கள் செய்தி மையம் அரங்கில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்வது பபாசி (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம்) விதிகளுக்கு முரணானது என்று அந்த அரங்கை காலி செய்யுமாறு பபாசி நிர்வாகம் வலியுறுத்தியது. அப்போது மக்கள் செய்தி மையம் நிறுவனர் அன்பழகன், மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டு அந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என பல தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நக்கீரனும் இதனை கண்டித்தது.

 

chennai book fair issue

 

 

இந்த நிலையில், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான பபாசியின் நடவடிக்கைகளை கண்டித்தும் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் மீது தரப்பட்ட புகாரை திரும்பப்பெறக் கோரியும் படைப்பாளிகள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஆகியோரின்  கையொப்பம் அடங்கிய கண்டன அறிக்கையை சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள கீழடி வரலாற்று அரங்கம் முன்பிருந்து, வாயில் கருப்புத்துணியைக் கட்டியபடி சென்று புத்தகக் கண்காட்சியில் உள்ள பபாசி அலுவலகத்தில் இன்று 14.01.2020 மாலை 4 மணிக்கு வழங்குவதற்காக புறப்பட்டனர்.

 

chennai book fair issue

 

முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். யாராவது இரண்டு பேர் மட்டும் புகார் மனுவோடு வாருங்கள், பபாசி நிர்வாகிகளிடம் அதனை கொடுக்கலாம். மற்றவர்கள் இங்கேயே இருங்கள் என்று போலீசார் கூறினர். அதற்கு இவர்கள், நாங்கள் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டோம், எந்த முழக்கங்களையும் எழுப்ப மாட்டோம், அமைதியாக சென்று மனுவை கொடுத்துவிட்டு திரும்பிவிடுவோம் என்றனர். ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் பபாசி நிர்வாகிகளை வெளியே அழைத்து வருகிறோம், அவர்களிடம் மனுக்களை கொடுங்கள் என்று போலீசார் பபாசி தலைவரான சண்முகத்தை அழைத்து வந்தனர். 

 

chennai book fair issue

 

படைப்பாளிகள் சார்பில் மனுவை கொடுத்தபோது, அதனை பெற்றுக்கொண்ட பபாசி தலைவர் சண்முகம், புரட்சி வாழ்க... புரட்சி ஓங்குக... என்று முழங்கினார். உடனே படைப்பாளர்கள், நாங்கள் கோரிக்கை மனு கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டு அவர் எங்களை இழிவுப்படுத்துகிறார், எங்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார். இதற்காக சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை என்று தரையில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியும் இவர்கள் தர்ணாவை கைவிடவில்லை.

 

dxf

 

இதையடுத்து பபாசி தலைவர் சண்முகத்தை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர், நான் உங்களை இழிவுப்படுத்தவில்லை. நானும் உங்களில் ஒருவன்தான். உங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு உற்சாசம் வந்தது. அந்த உணர்ச்சியில்தான் அதுபோன்று சொன்னேன் என்றார். தர்ணாவில் ஈடுபட்ட அருணன், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சண்முகத்திடம் சொன்னதோடு, பபாசி நமது கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு செல்வோம் என்று படைப்பாளர்களிடம் தர்ணாவை முடிக்க சொன்னார். படைப்பாளர்கள் நடத்திய இந்த போராட்டம் புத்தக கண்காட்சிக்கு வந்த வாசகர்கர்களை திரும்பி பார்க்க வைத்தது. படைப்பாளர்களின் ஒற்றுமைக்கு அவர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்