ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த நாகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (41). கடந்த 10 ஆண்டுகளாக விருப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அங்கு வேலைக்குச் செல்லாமல் கூலி தொழிலுக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 13-ந் தேதி கெமிக்கல் நிறுவனத்தின் உரிமையாளர், முருகேசனைத் திட்டி அவரது மோட்டார் சைக்கிளையும் பிடுங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் என் சாவுக்குக் காரணம் கெமிக்கல் உரிமையாளர் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி முருகேசன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் வைக்கப்பட்டுள்ளது. எனினும் முருகேசன் உறவினர்கள் அவரது உடலை வாங்காமல் தற்கொலைக்குக் காரணமான கெமிக்கல் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உடலை வாங்கு மறுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து கெமிக்கல் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது கெமிக்கல் உரிமையாளர் தலைமறைவாக உள்ளார். இன்று 7-வது நாளாக முருகேசன் உடலை வாங்க மறுத்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முருகேசன் உறவினர்களுடன் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.