கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே திருமணம் செய்வதாகக் கூறி காதலன் ஏமாற்றிய நிலையில், தலைமறைவான காதலனின் வீட்டுமுன்பு, இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்திரவிளை அடுத்த எஸ்.டி.மாங்காடு பகுதியைச் சேர்ந்த ரகுகுமார் என்பவருடைய மகள் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்தப் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்துவந்த நிலையில், நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ரமேஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, காலப்போக்கில் காதலாக மாறியது. இருவரும் காதலித்துவந்த நிலையில், சில மாதங்களாக ரமேஷ் இளம்பெண்ணைப் புறக்கணிக்கத் தொடங்கியதாகவும், இதுகுறித்து ரேகா ஆறு மாதங்களுக்கு முன்பே மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பே ரேகாவிற்கும் ரமேஷுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், காவல் நிலையத்திலும் ரமேஷ் ரேகாவைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக எழுதிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ரமேஷ் தலைமறைவானார். நேற்று, ரேகா அவரது குடும்பத்தினருடன் கச்சேரிநடையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று ரமேஷ் வருகைக்காகக் காத்திருந்தார். காலையில் இருந்து இரவு 11.30 மணி வரை காத்திருந்தும் ரமேஷ் வரவில்லை. அவர் எங்கே சென்றார் என்பது தெரியாததால் அவர் வீட்டிற்கே சென்றனர், மணமகள் வீட்டார். ஆனால், அங்கு வாலிபரின் வீடு பூட்டப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், பூட்டியிருந்த வீட்டின் முன்னே அமர்ந்த ரேகா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நித்திரவிளை போலீசார் ரேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரேகாவுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.