திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர் கூட்டமைப்பு 1000 புத்தகங்களை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கியது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்புத்தகங்களை பொது நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத்திடம் கடந்த மாதம் ஒப்படைத்தார். இந்நிலையில் மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு 2,222 தமிழ் புத்தகங்கள், 2,492 ஆங்கில புத்தகங்கள் என மொத்தம் 4,714 புத்தகங்களை வழங்கியுள்ளார்.